ஊரடங்கு சற்று தளர்த்தியபோதே போக்குவரத்து நெரிசலில் சிக்கும் ஈரோடு
ஊரடங்கு சற்று தளர்த்தியபோதே ஈரோடு போக்குவரத்து நெரிசலில் ஈரோடு சிக்கி உள்ளது.
ஈரோடு,
கொரோனா ஊரடங்கின்போது ஈரோடு மாநகர் பகுதியில் சுற்றி வந்தவர்களுக்கு அத்தனை சாலைகளும் எத்தனை பிரமாண்டமாக இருக்கிறது என்று வியப்பை ஏற்படுத்தியது. காரணம் அப்படி எந்த வாகனங்களும் ஓடாமல் ஈரோட்டில் சாலைகளை பார்க்கவே முடியாது. வாகனங்கள் ஓடுவது மட்டுமின்றி, எந்த சாலையோரத்திலும் வாகனங்கள் நிறுத்தப்படாமல் பார்ப்பதே அபூர்வம்.
ஆனால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதிக்கு பின்னர் கடந்த வாரம் ஊரடங்கு விதிகள் தளர்வு வரை அனைத்து ரோடுகளும் வெறுமையாக காட்சி அளித்தன. ஈரோட்டில் எத்தனை சந்துகள் இருக்கின்றன. அவற்றில் வாகனங்கள் செல்ல தகதியான ரோடு எவை, வாகன நிறுத்தம் மட்டுமே செய்ய தகுதியான ரோடுகள் எவை என்று துல்லியமாக கண்டறியும் வாய்ப்பும் இருந்தது. அந்ந அளவுக்கு சற்றும் பரபரப்பு இல்லாத சாலைகள் காட்சி அளித்தன.
ஆனால் ஊரடங்கு விதிகள் சற்று தளர்த்திய பிறகு, வாகன போக்குவரத்து அதிகரிக்கத்தொடங்கியது. நேற்று வழக்கமான நாட்களில் ஓடும் வாகனங்கள் அளவுக்கு போக்குவரத்து இருந்தது. பயணிகள் போக்குவரத்து பஸ் தவிர அனைத்து வகையான வாகனங்களும் இயங்கின. மணிக்கூண்டில் இருந்து எல்லை மாரியம்மன் கோவில் செல்லும் நேதாஜி ரோடு பகுதியில் மதிய நேரத்தில் கூட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மார்க்கெட் செயல்படாத நிலையிலும் ஆர்.கே.வி. ரோட்டில் வாகனங்கள் தொடர்ச்சியாக சென்று கொண்டு இருந்தன. சுவஸ்திக் கார்னர் பகுதியிலும் வாகனங்கள் ஊர்வலம் போன்று சென்றன. பஸ் நிலையம் முழுமையாக அடைக்கப்பட்ட நிலையிலும் மேட்டூர் ரோடு, நாச்சியப்பாவீதி, சத்தி ரோடு உள்ளிட்ட சாலைகள் பரபரப்பாகவே இருந்தன.
இத்தனைக்கும் 50 சதவீதம் மக்கள் இன்னும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வரவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பெரும்பாலானவர்கள் வருகிறார்கள். கடைகள், அலுவலகங்கள் திறப்பு காரணமாக சற்று அதிகமாக மக்கள் வருகிறார்கள். இந்த நேரத்திலேயே ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமான இயல்பு வாழ்க்கைக்கு ஈரோடு திரும்பி வருவதை காட்டுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று மேம்பாலத்தின் அடியில் இடைவெளி இன்றி வாகனங்களை உரிமையாளர்கள் நிறுத்திச்சென்று இருந்தனர்.