ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.40 லட்சத்தில் ஸ்கேன் வசதி - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள ஸ்கேன் வசதியை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கணேஷ்நகர், குரூஸ்புரம், மடத்தூர் ஆகிய 3 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை செய்வதற்கு வசதியாக மொத்தம் ரூ.40 லட்சம் செலவில் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் திறப்பு விழா கணேஷ் நகரில் நேற்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., சின்னப்பன் எம்.எல்.ஏ., ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஸ்கேன் வசதியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார், மாநகராட்சி நிர்வாக என்ஜினீயர் பார்த்திபன், உதவி செயற்பொறியாளர் சரவணன், தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணலீலா, மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், உதவி பொறியாளர் பிரின்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிவாரண பொருட்கள்
கோவில்பட்டி ராஜீவ் நகர், எட்டயபுரத்தை அடுத்த இளம்புவனம் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து அந்த இடங்களை கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து, அங்குள்ள மக்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு தேவையான பொருட்களை தன்னார்வலர்கள் மூலம் வழங்குகின்றனர்.
இதையடுத்து கோவில்பட்டி ராஜீவ்நகரில் தனிமைப்படுத்தப்பட்ட சுமார் 600 குடும்பத்தினருக்கும், இளம்புவனத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சுமார் 500 குடும்பத்தினருக்கும் தேவையான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். இந்த நிவாரண பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள தன்னார்வலர்களிடம் ஒப்படைத்தார். அவற்றை பெற்றுக்கொண்ட தன்னார்வலர்கள், தனிமை பகுதியில் வசிக்கும் மக்களிடம் ஒப்படைத்தனர்.
ஆலோசனை கூட்டம்
தொடர்ந்து கோவில்பட்டி பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், கோவில்பட்டி பயணியர் விடுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, நகரசபை ஆணையாளர் ராஜாராம், என்ஜினீயர் கோவிந்தராஜ், குடிநீர் வடிகால்வாரிய நிர்வாக பொறியாளர்கள் செந்தூர் பாண்டியன், பாலசுப்பிரமணியன், விசுவலிங்கம்,
தாசில்தார்கள் மணிகண்டன், பாஸ்கரன், யூனியன் ஆணையாளர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, சசிகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா, அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், துணை தலைவர் பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டு குடிநீர் திட்டம்
கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், கோவில்பட்டிக்கு தினமும் 90 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது கோவில்பட்டியில் தினமும் 1 கோடியே 20 லட்சம் லிட்டர் குடிநீர் சுழற்சி முறையில் சீராக வினியோகம் செய்யப்படுகிறது. கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 5 யூனியன்களில் உள்ள 248 கிராமங்களுக்கு ரூ.90 கோடி செலவில் நடைபெறும் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. கழுகுமலை, கயத்தாறு, எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தடையின்றி சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.