திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், கொரோனா பாதித்த தொழிலாளி திடீர் மாயம் - டீக்கடைக்கு சென்று திரும்பியதால் பரபரப்பு

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த தொழிலாளி திடீரென்று மாயமானார். அவர் டீக்கடைக்கு சென்று திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-15 07:41 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அந்த வகையில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 111 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதில் ஒருவர் இறந்து விட, 96 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதற்கிடையே சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை கண்டறிந்து தினமும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் சிலரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் ஆத்தூர் தாலுகா கே.சிங்காரக்கோட்டையை சேர்ந்த 48 வயதான தொழிலாளிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இவர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்தவர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தவர், மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர், நேற்று காலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

மேலும் கொரோனா தனிவார்டில் அவரை சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதற்கிடையே திடீரென அவர் காணாமல் போய்விட்டார். இதையடுத்து சுகாதாரத்துறையினர், மருத்துவமனை வளாகம் முழுவதும் அவரை தேடினர். அதேநேரம் ஒருசில நிமிடங்கள் கழித்து அவர் திரும்பி வந்தார். அப்போது அவர் பசியாக இருந்ததால் டீ குடிப்பதற்கு கடைக்கு சென்றதாக தெரிவித்தார்.

அதன்பின்னரே மருத்துவமனை அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். இதைத் தொடர்ந்து கொரோனா வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் சென்ற டீக்கடையில் வேலை செய்வோருக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த சம்பவத்தால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 112 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்