ஊரடங்கால் தென்னங்கீற்றுகள்-தட்டிகள் விற்பனை முடங்கியது
ஊரடங்கால் தென்னங்கீற்றுகள், தட்டிகள் விற்பனை முடங்கியது. இதனால் வாழ்வாதாரம் இழந்து தொழிலாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
கறம்பக்குடி,
ஊரடங்கால் தென்னங்கீற்றுகள், தட்டிகள் விற்பனை முடங்கியது. இதனால் வாழ்வாதாரம் இழந்து தொழிலாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
தென்னங்கீற்றுகள்
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிவிட்டால் தென்னங்கீற்றுகள் மற்றும் தட்டிகளுக்கு கிராக்கி ஏற்படுவது வழக்கம். கோடை வெயிலை சமாளிக்க வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள், வீடுகள் முன்பு பலரும் தென்னங்கீற்றுகள் மற்றும் தட்டிகளால் பந்தல்கள் அமைப்பார்கள். மேலும் திருவிழா கொண்டாட்டங்களுக்கான விழா மேடை, நீர்மோர் பந்தல்கள், அன்ன தான பந்தல்கள் போன்றவையும் தென்னங்கீற்றுகளாலேயே போடப்படும். இதனால் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை விற்பனை களைகட்டும்.
இந்நிலையில் கொரோனா வைரசின் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. வணிக நிறுவனங்களும் செயல்படவில்லை. இதனால் தென்னங்கீற்றுகள், தட்டிகள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகும் வாங்க ஆட்கள் இல்லாததால் சில தொழிலாளர்கள் சந்தை பகுதியிலேயே கட்டி வைத்து விட்டு சென்றுள்ளனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
இதுகுறித்து கறம்பக்குடியில் தென்னங்கீற்று, தட்டிகளை விற்பனை செய்யும் பெண் தொழிலாளி ஒருவர் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தென்னங்கீற்றுகள், தட்டிகள் பின்னும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் உள்ளோம். கோடை காலத்திலேயே தேவை அதிகரித்து விற்பனை கூடும். கஜா புயல் பாதிப்பால் தென்னை மரங்கள் சாய்ந்ததால் எங்கள் தொழில் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டாவது விற்பனை நன்கு இருக்கும் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் ஊரடங்கு எங்கள் வாழ்வாதாரத்தை சிதைத்து விட்டது.
வாரச்சந்தைகள் நடை பெறாததால் பின்னப்பட்ட கீற்றுகள், தட்டிகளை விற்பனை செய்ய முடியவில்லை. அதனால் வெயிலில் மக்கி வீணாகி வருகின்றன. எனவே வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.