ஊட்டி அருகே, கோவில் முன்பு வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்பு - போலீசார் விசாரணை

ஊட்டி அருகே கோவில் முன்பு வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-05-14 22:15 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கொல்லிமலை கிராமத்தில் காந்திபுதூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று காலை 7 மணிக்கு மதுரை வீரன் கோவில் முன்பு ஒரு குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது. இதை பார்த்த பொதுமக்கள் கொலக்கொம்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை கோவில் முன்பு வீசப்பட்டது தெரியவந்தது.

குளிரால் குழந்தையின் உடல் பாதிக்காமல் இருக்க கம்பிளி ஆடை போர்த்தப்பட்டது. இதையடுத்து அந்த பச்சிளங் குழந்தையை மீட்டு கொல்லிமலையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் வெப்பத்தை சரியாக வைக்க இன்குபேட்டர் எந்திரத்தில் வைக்கப்பட்டது. டாக்டர்கள் குழந்தையின் உடல் நிலை நன்றாக உள்ளது என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தை பாதுகாப்பு நல அதிகாரிகள் குழந்தையை வீசி சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை பிறந்து 10 முதல் 12 நாட்களே இருக்கும். ஊட்டி அருகே கிராமத்தில் ஆண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்களால் வளர்க்க முடியாது என யாரேனும் வீசி சென்றார்களா? அல்லது தவறான வழியில் பிறந்ததால் வீசப்பட்டதா? என விசாரணை நடந்து வருகிறது.

ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி வருவாய் இல்லாமல் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் இருக்கின்றனர். வறுமையால் குழந்தையை பராமரிக்க முடியாது என எண்ணி வீசப்பட்டதா? எனவும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

மேலும் செய்திகள்