தொரப்பள்ளியில், பஜாருக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்

தொரப்பள்ளியில் பஜாருக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம் செய்தது.

Update: 2020-05-14 22:00 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று, நேற்று அதிகாலை 4 மணியளவில் கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்தது. தொடர்ந்து தொரப்பள்ளி பஜாருக்குள் புகுந்தது. பின்னர் அங்குள்ள அயூப் என்பவரது மளிகை கடையை முற்றுகையிட்டது. அதிகாலை என்பதால் கடை பூட்டி கிடந்தது. மேலும் மக்கள் நடமாட்டமும் இல்லை. இருப்பினும், மளிகை கடையின் முன்பக்க இரும்பு கதவை துதிக்கையால் இழுத்து உடைத்தது.

இதையடுத்து கடையில் இருந்த உணவு பொருட்களை துதிக்கையால் எடுத்து தின்று அட்டகாசம் செய்தது. மேலும் சில உணவு பொருட்களை வெளியே எடுத்து வீசியது. சத்தம் கேட்டு திரண்டு வந்த பொதுமக்கள், காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் காட்டுயானை அங்கிருந்து சென்றது. பின்னர் அங்கு கார்குடி வனச்சரகர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர். தொடர்ந்து காட்டுயானை உடைத்த கடையை பார்வையிட்டனர்.

அப்போது ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில் தலைமையிலான பொதுமக்கள், காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட கடைக்காரருக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்