முகக்கவசம் அணிய வலியுறுத்தி, கடைகளில் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டிய போலீசார்
கிணத்துக்கடவில் வாடிக்கையாளர்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தி கடைகளில் போலீசார் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டினர்.
கிணத்துக்கடவு,
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி முகக்கவசம் அணிய வேண்டும், கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஆனால் யாரும் இதை பின்பற்றுவதில்லை. பேரூர் சரக பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர்குமார் மற்றும் போலீசார் கடைகளில் விழிப்புணர்வு நோட்டீசை ஒட்டினர். அப்போது தமிழக வியாபாரிகள் சம்மேள கிணத்துக்கடவு சங்க செயலாளர் முருகேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
அரசு உத்தரவின்படி கடையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மற்றும் பொருட்கள் வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று பொருட்கள் வாங்க வேண்டும். அரசின் உத்தரவை மீறும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.