சொந்த ஊருக்கு நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்கள் 18 பேர் ஆரல்வாய்மொழியில் சிக்கினர்

நாகர்கோவிலில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்கள் 18 பேரை ஆரல்வாய்மொழியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Update: 2020-05-15 02:06 GMT
ஆரல்வாய்மொழி, 

நாகர்கோவிலில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்கள் 18 பேரை ஆரல்வாய்மொழியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, அவர்களுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். இதுபோல் சரக்கு லாரியில் மறைந்திருந்து செல்ல முயன்ற 10 பேரும் போலீசில் பிடிபட்டனர்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

வடமாநில தொழிலாளர்கள்

நாகர்கோவில், கோட்டார் ரெயில்நிலையம் அருகே உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கியுள்ளனர். இவர்கள் ரெயில் நிலையத்தில் உள்ள உணவகங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் வேலையிழந்து போதிய வருமானம் இன்றி தவித்தனர். மேலும் ரெயில், பஸ் போக்குவரத்து முடக்கப்பட்டதால் சொந்த ஊர்களுக்கும் செல்ல முடியவில்லை.இந்தநிலையில் நெல்லையில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக வடமாநில தொழிலாளர்கள் இடையே வதந்தி பரவியது. நெல்லைக்கு சென்று விட்டால் அங்கிருந்து ரெயில் மூலம் ஊருக்கு சென்று விடலாம் என எண்ணினர்.

போலீசார் தடுத்து நிறுத்தினர்

இதையடுத்து நேற்று வடமாநிலத்தை சேர்ந்த 18 தொழிலாளர்கள் தங்களின் உடமைகளை சுமந்து கொண்டு நெல்லையை நோக்கி கால் நடையாக புறப்பட்டனர். அவர்கள் நேற்று மாலை 6 மணியளவில் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடத்திய போது, தாங்கள் ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி தவிப்பதாகவும், நெல்லையில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு ரெயில் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, நெல்லைக்கு நடந்து செல்வதாக கூறினர். தொடர்ந்து போலீசார் தொழிலாளர்களிடம், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுவரை நாகர்கோவிலில் தங்கி இருக்குமாறு அறிவுரை கூறினர். பின்னர், தொழிலாளர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி மீண்டும் நாகர்கோவிலுக்கு அனுப்பி வைத்தனர்.

சரக்கு லாரி

இந்தநிலையில், நேற்று இரவு 8 மணியளவில் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியை ஒரு லாரி கடந்து செல்ல முயன்றது. அந்த லாரியின் பின்பகுதி தார் பாயால் மூடப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் தார் பாயை விலக்கி சோதனையிட்ட போது வடமாநிலத்தை சேர்ந்த 10 தொழிலாளர்கள் பதுங்கி இருந்தனர்.

விசாரணையில், அந்த லாரி மத்திய பிரதேசத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சரக்கு ஏற்றி வந்தது தெரிய வந்தது. பின்னர், அது திரும்ப செல்லும் போது நாகர்கோவிலில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் 10 பேர் லாரியில் ஏறி சென்றனர். ஆனால், எதிர்பாராத விதமாக ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலீசாரிடம் சிக்கிகொண்டனர். இதையடுத்து போலீசார் அந்த 10 பேரையும் மீண்டும் நாகர்கோவிலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்