கும்பகோணம் மார்க்கெட்டில் காய்கறி வாங்கி வந்த காரைக்கால் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை

கும்பகோணம் மார்க்கெட்டில் இருந்து காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்த காரைக்கால் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2020-05-15 01:57 GMT
காரைக்கால்,

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் வேகமெடுத்து உள்ளது. குறிப்பாக சென்னை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிய தொழிலாளர்களால் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் கொரோனா பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர், மருத்துவக்குழுவினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

காரைக்கால் மாவட்டத்தை அடுத்த தமிழக பகுதியான கும்பகோணம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து காரைக்கால் வியாபாரிகள் காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கும்பகோணம் மார்க்கெட்டில் காய்கறி விற்ற வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

21 பேருக்கு பரிசோதனை

எனவே அங்கிருந்து காரைக்காலுக்கு காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்த வியாபாரிகள், அவர்களிடம் இருந்து காய்கறி வாங்கிய சிறு வியாபாரிகளுக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து கும்பகோணத்தில் இருந்து காய்கறி வாங்கி வந்த வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட நலவழித்துறை அதிகாரிகள், நேற்று காரைக்கால் புதிய காய்கறி மார்க்கெட் பகுதிக்கு சென்று, முதல்கட்டமாக 21 வியாபாரிகளை ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர்களின் சளி, உமிழ்நீர் மாதிரிகள் எடுத்து கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனை காய்கறி மார்க்கெட்டில் உள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் நடத்தப்படும் என்று மாவட்ட நலவழித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்