கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 45 நிறுவனங்கள் தீவிர முயற்சி - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தகவல்
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 45 நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பெங்களூரு,
துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கொரோனா பரிசோதனை உபகரணங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். எஸ்.என்.லைப் சயின்ஸ் மற்றும் சளியில் இருந்து ஆர்.என்.ஏ.வை தனியாக பிரித்து எடுக்கும் ரோபோ எந்திரத்தை அவர் தொடங்கி வைத்து பேசியதாவது:-
“கொரோனாவுக்கு தடுப்பு மருந்து மற்றும் குறைந்த செலவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பெங்களூருவில் உள்ள 45 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சில ஆராய்ச்சி பணிகள் முடிந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில ஆராய்ச்சி முடிவுகள் சோதனை நிலையில் இருக்கின்றன.
பரிசோதனை முடிவுகள்
இந்த கொரோனா பிரச்சினைக்கு தீர்வு காண கர்நாடக நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பது, உண்மையிலேயே மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ஒரு உயிரி தொழில்நுட்ப நிறுவனம், 5 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் உபகரணத்தை தயாரித்துள்ளது. இன்னொரு நிறுவனமும், கொரோனாவை கண்டுபிடிக்கும் எந்திரத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதேபோல் சில நிறுவனங்கள் பல்வேறு வகையான எந்திரங்களை உருவாக்கியுள்ளன. சுகாதார விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள இந்த 5 நிமிட கொரோனா பரிசோதனை உதவியாக இருக்கும். கொரோனாவை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விலங்குகள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ஆலோசித்து முடிவு
கொரோனா நோயாளிகளின் சளி மாதிரியை வழங்குமாறு அந்த நிறுவனங்கள் கேட்டுள்ளன. இந்த முயற்சி வெற்றி பெற்றால், உள்ளூர் மட்டத்திலேயே கொரோனா பரிசோதனை கருவிகள் கிடைக்கும் நிலை ஏற்படும். அந்த நிறுவனங்களுக்கு கொரோனா நோயாளிகளின் சளி மாதிரி வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இந்த நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்த ஒரு குழு அமைக்கப்படும்.”
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.