பால்கரில் இருந்து வரும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மும்பையில் தங்குமிடம் - பதில் அளிக்க மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பால்கரில் இருந்து வரும் மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களுக்கு மும்பையில் தற்காலிக தங்குமிடம் அமைத்து கொடுப்பது குறித்து பதில் அளிக்க மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
மும்பை ஐகோர்ட்டில் சரண் ரவீந்திர பட் என்பவர் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
பால்கரில் கடந்த மே-1-ந் தேதி 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது மேலும் 69 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 47 பேர் சுகாதாரப்பணியாளர்கள், வார்டு நர்ஸ் போன்றவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் மும்பையில் பணிபுரிபவர்கள்.
பால்கரில் இருந்து தினமும் 129 அரசு பஸ்களில் மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட அத்திவாசிய பணியாளர்கள் மும்பை சென்று வருகின்றனர்.
மும்பைக்கு தினமும் சென்று வரும் அத்தியாவசிய பணியாளர்கள் தான் பால்கரில் கொரோனா தொற்று பரவ காரணமாக உள்ளனர்.
இதே நிலை தான் தானே, நவிமும்பையிலும் உள்ளது. எனவே பால்கரை சேர்ந்த அத்தியாவசிய பணியாளர்கள் மும்பையிலேயே தற்காலிகமாக தங்க வைக்க தங்குமிடம் அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
பதில் அளிக்க உத்தரவு
மனுவை தலைமை நீதிபதி திபான்கர் தத்தா மற்றும் நீதிபதி ஏ.ஏ. செய்யது ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
பின்னர் அவர்கள் பால்கரில் இருந்து தினமும் வந்து செல்லும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மும்பையிலேயே தற்காலிக தங்குமிடம் அமைத்து கொடுக்கும் விவகாரம் குறித்து வருகிற 15-ந் தேதிக்குள் பதில் அளிக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.