ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து கொடுப்பதுபோல் நடித்து முதியவர்களை குறி வைத்து மோசடி செய்தவர் கைது
ஏ.டி.எம்.மில் முதியவர்களுக்கு பணம் எடுத்து கொடுப்பதுபோல் நடித்து அவர்களின் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி நூதன முறையில் பண மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை வளசரவாக்கம், ஜெய்கார்டன் 1-வது தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 65). இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றார். அவருக்கு கண்பார்வை சற்று குறைவு என்பதால் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தனக்கு யாராவது உதவி செய்வார்களா? என காத்திருந்தார்.
அப்போது ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், முதியவர் பிரபாகரனுக்கு உதவுவதுபோல் அவரது ஏ.டி.எம். கார்டை வாங்கியதுடன், அவரது ரகசிய குறியீட்டு எண்ணை கேட்டு தெரிந்து கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதுபோல் பாவனை செய்தார்.
பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என்று கூறி பிரபாகரனிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு சிறிது தூரம் நடந்து சென்ற பிரபாகரனின் செல்போனுக்கு அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுத்ததாக எஸ்.எம்.எஸ் வந்தது.
கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் கையில் இருந்த ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அது தன்னுடைய கார்டு இல்லை. போலி என்பது தெரிந்தது. அதன்பிறகுதான் மர்மநபர் தனக்கு பணம் எடுத்து கொடுப்பதுபோல் நடித்து, போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு தனது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி நூதன முறையில் பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.
இதுகுறித்து பிரபாகரன் வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார். வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமைவீரன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபரின் உருவம் மற்றும் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து வளசரவாக்கம், எஸ்.வி.எஸ். நகரைச்சேர்ந்த பார்த்தசாரதி(50) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
தொழிலில் நஷ்டம்
அதில் அவர், சொந்தமாக தொழில் செய்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் இதுபோல் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் முதியவர்களை குறி வைத்து அவர்களுக்கு பணம் எடுத்து கொடுக்க உதவுவதுபோல் நடித்து, அவர்களின் ஏ.டி.எம். கார்டு, ரகசிய எண்ணை வாங்கி கொண்டு, ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என அவர்களிடம் போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து அனுப்பி விடுவார். பின்னர் அவர்களது ஏ.டி.எம். கார்டு, ரகசிய எண்ணை பயன்படுத்தி அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார்.
இவ்வாறு பலரிடம் மோசடியில் ஈடுபட்டதும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஹெல்மெட்டுடன் சென்று வந்ததும் தெரிந்தது. அவரிடமிருந்து ரூ.25 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள், ஏராளமான ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பார்த்தசாரதி, விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே இதுபோன்ற 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.