கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி: கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்

பாளையங்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

Update: 2020-05-14 23:15 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டையில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக காய்கறி கடைகளில் வருவாய்த்துறை மகளிர் சார்பில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உலகை அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் தடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. கிருமி நாசினி தெளித்தல், மருத்துவ பரிசோதனை, தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை, மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு என பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதி நவீன எல்.இ.டி. வீடியோ வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்படுகிறது.

பொதுமக்களாகிய நாம் நோயின் தாக்கத்தை அறிந்து வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். பொது இடங்களில் செல்ல நேரிடும் போது, ஒருவருக்கு ஒருவர் 3 அடி சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும். வெளிமாநிலம், வெளி மாவட்டம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் போது, அரசு விடுக்கும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை சுமையாக கருதாமல் சமூக கடமையாக நினைத்து ஒத்துழைப்பு தர வேண்டும். நோய் தாக்கம் ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் அக்கறை காட்ட வேண்டும்.

நோயோடு தான் போராட வேண்டுமே தவிர, நோய் தாக்கியவரோடு அல்ல என்பதை உணர வேண்டும். கை, கால்களை சுத்தமாக சோப்பு போட்டு கழுவி பாதுகாக்க வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், பாளையங்கோட்டை தாசில்தார் தாஸ்பிரியன், வட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்