கள்ளச்சந்தையில் மது விற்பனை: டாஸ்மாக் கடை ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்ததாக டாஸ்மாக் கடை ஊழியர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-14 22:30 GMT
ஈரோடு, 

தமிழகத்தில் கடந்த 7, 8-ந் தேதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதன்பிறகு சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கடைகள் மூடப்பட்டன. அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இந்த நிலையில் ஈரோடு திருநகர்காலனி ஜெயகோபால் வீதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது பெட்டிக்கடையில் மதுவிற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பெட்டிக்கடைக்காரரான கருங்கல்பாளையத்தை சேர்ந்த கணேசனிடம் (வயது 58) போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் டாஸ்மாக் கடையின் ஊழியர்கள் உதவியுடன் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதுபற்றி போலீசார் கொடுத்த தகவலின் பேரில் ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் இளங்கோ மற்றும் அதிகாரிகள் டாஸ்மாக் கடைக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ.56 ஆயிரத்து 600 மதிப்பிலான மது பாட்டில்கள் கணக்கில் வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கடையின் மேற்பார்வையாளரான பவானி முத்துக்கவுண்டன்புதுரை சேர்ந்த வேலுசாமி (48), விற்பனையாளரான பவானி நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த முருகேசன் (45) ஆகியோர் சேர்ந்து கடந்த 8-ந் தேதி கடையை மூடுவதற்கு முன்பு மதுவை அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு கொண்டு சென்று பதுக்கி வைத்ததும், பெட்டிக்கடையின் உரிமையாளரான கணேசனின் உதவியுடன் அவர்கள் மதுவை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடை ஊழியர்களான முருகேசன், வேலுசாமி, பெட்டிக்கடைக்காரரான கணேசன் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். மேலும், வேலுசாமி, முருகேசன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் இளங்கோ உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்