ஊரடங்கு காலத்தில் சாராயம் காய்ச்சிய 16 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஊரடங்கு காலத்தில் அரியலூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சிய 16 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2020-05-14 06:52 GMT
அரியலூர், 

ஊரடங்கு காலத்தில் அரியலூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சிய 16 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

16 பேர் கைது

ஊரடங்கை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதைபயன்படுத்தி அரியலூர் மாவட்டத்தில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இதை தடுக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பொறுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மேற்பார்வையில், ஆண்டிமடம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் அரியலூர் மாவட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா? என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆண்டிமடம் அருகே உள்ள சிலம்பூர் கீழத் தெருவை சேர்ந்த சக்திவேல் (வயது 30), அகரம் நடுதெருவை சேர்ந்த பொய்யாமொழி(43), அதே ஊர் கீழத் தெருவை சேர்ந்த அஜித்(23), பட்டித்தெருவை சேர்ந்த சுதாகர் (48), மேலத்தெருவை சேர்ந்த காமராசு(40), அழகாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த சங்கர் (40), அய்யூர் தெற்கு தெருவை சேர்ந்த பிரபு (36), அதே ஊர் வடக்கு தெருவை சேர்ந்த சேதுபதி (55) மற்றும் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா என்ற செல்வகுமார்(45), கங்குழி தெற்கு தெருவை சேர்ந்த ரவி(48), அதே ஊர் வடக்கு தெருவை சேர்ந்த காமராஜ்(45), கூவத்தூர் மேல தெருவை சேர்ந்த ராமசாமி(29) மற்றும் அதே தெருவை சேர்ந்த இளவரசன்(33), மேலும் மேலநெடுவாய் மேற்கு தெருவை சேர்ந்த ஜேம்ஸ்(40), சிவலிங்கபுரம் அருள்சாமி(43), வல்லம் மேற்கு தெருவை சேர்ந்த சந்தோஷ்குமார்(27) ஆகிய 16 பேர் ஆண்டிமடம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரிய வந்தது. தகவலறிந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாராய ஊறல்களையும், சாராயத்தையும் கைப்பற்றி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மேற்கண்ட அனைவரும் சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்துள்ளதால், இவர்கள் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட கூடும் என்பதாலும், கள்ளச்சாராயம் குடிப்பவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலும் அவர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பொறுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் ஆகியோர் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் பரிந்துரை செய்தனர். பரிந்துரையை ஏற்ற போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரத்னாவிடம் எடுத்துக்கூறி பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து அரியலூர் கலெக்டர் ரத்னா மேற்கண்ட 16 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு இதுவரை அரியலூர் மாவட்டத்தில் 38 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்