அரசின் விதிமுறைகளை பின்பற்றாத டீக்கடைகளுக்கு ‘சீல்’ அதிகாரிகள் நடவடிக்கை
அரசின் விதிமுறைகளை பின்பற்றாத டீக்கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.;
புதுக்கோட்டை,
அரசின் விதிமுறைகளை பின்பற்றாத டீக்கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
டீக்கடைகள் திறப்பு
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் சில நடைமுறைகளை பின்பற்றி கடைகள் திறக்க அறிவிக்கப்பட்டன. அதன்அடிப்படையில் கடந்த 11-ந் தேதி முதல் டீக்கடைகள் உள்ளிட்ட 34 வகையான கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. இதையடுத்து புதுக்கோட்டையில் டீக்கடைகள் உள்ளிட்ட அரசு அனுமதித்த கடைகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் டீக்கடைகளில் ஊழியர்கள் முக கவசம் அணியாமல் இருத்தல், பார்சல் டீயை தவிர கடை முன்பு நின்று வாடிக்கையாளர்கள் குடிக்க அனுமதித்தல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல் உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
அதிகாரிகள் சோதனை
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் தாசில்தார் முருகப்பன், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் நேற்று புதுக்கோட்டை நகர பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாமலும், டீக்கடைகள் முன்பு வாடிக்கையாளர்கள் நின்று டீ குடிக்க அனுமதித்த மற்றும் அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றாத டீக்கடைகளை இழுத்து பூட்டினர். மேலும் அந்த கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர். கீழ ராஜ வீதி, மச்சுவாடி, திருவள்ளுவர் சிலை அருகே உள்பட என மொத்தம் 5 டீக்கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. டீக்கடைகளில் போடப்பட்டிருந்த பலகாரங்களை விற்பனை செய்ய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இந்த அதிரடி சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும், அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.