மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்வு
கரூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிப்பு
கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 42 பேர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணம் அடைந்து வீடு திரும்பினர். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் உதவியாளர், கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்து திரும்பியவர், மராட்டிய மாநிலத்தில் இருந்து பள்ளபட்டிக்கு வந்த 4 பேர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் பள்ளபட்டியை சேர்ந்த 3 பேருக்கும், கரூர் அருகே உள்ள உழைப்பாளி நகர் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் 4 பேரும் அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மக்கள் அச்சம்
இந்நிலையில் நேற்று பள்ளபட்டியை சேர்ந்த 60 வயது முதியவருக்கும், தேவர்மலையை சேர்ந்த 44 வயதுடைய ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, அப்பகுதிக்குல் வெளி ஆட்கள் யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைத்து, கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.