காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீராற்றல் துறையுடன் இணைப்பதை ரத்து செய்ய வேண்டும்
காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீராற்றல் துறையுடன் இணைப்பதை ரத்து செய்யவேண்டும் என கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
திருச்சி,
காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீராற்றல் துறையுடன் இணைப்பதை ரத்து செய்யவேண்டும் என கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
பல்வேறு அமைப்புகள்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சிசார்பற்றது), மக்கள் அதிகாரம், காவிரி உரிமை மீட்பு குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், அகில இந்திய மஜ்லீஸ் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் திரண்டு வந்தனர். அவர்கள் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னத்துரை தலைமையில் சமூக இடைவெளியை பின்பற்றி நின்றனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தங்களது அமைப்புகளின் சார்பில் தனித்தனியாக மனுக்களை கொடுத்தனர். அவர்கள் கொடுத்த மனுக்களில் கூறப்பட்டு இருந்தவை வருமாறு:-
மத்திய அரசு சட்டம் ரத்து
தமிழக மக்கள் நீண்ட சட்ட போராட்டம் நடத்தி பெற்ற வெற்றியான காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீராற்றல் துறையுடன் இணைத்து அறிவித்துள்ள சட்டத்தை ரத்து செய்யவேண்டும். கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக விலக்கி கொள்ளப்படாத இந்த நேரத்தில் மத்திய அரசு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அவசர சட்டத்தினால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் நமக்கு உள்ள உரிமையை பாதுகாத்திட உடனடியாக அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளையும் கலந்தாலோசித்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.
மின்சார சட்ட திருத்தம்
மத்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ந்தேதி கொண்டு வந்துள்ள மின்சார சட்ட திருத்த கொள்கை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் இந்நாள் வரை விவசாயிகள் பயன்படுத்தி வரும் இலவச மின்சாரம் ரத்தாகி பாமர, நடுத்தர, குடிசை வாழ்மக்கள், நெசவாளர்கள், சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இந்த சட்டத்தை தமிழகத்தில் அமல் படுத்த விடாமல் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும். தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து ரூ.18 ஆயிரம் கோடி கொரோனா நிவாரண நிதி பெற்று அனைத்து குடும்பத்தினருக்கும் மாதம் தலா ரூ.6 ஆயிரம் வழங்கவேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது. முன் னதாக மனு கொடுக்க வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.