தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், தினமும் 3 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் - கள ஆய்வுக்குழு அதிகாரிகள் உத்தரவு

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தினமும் 3 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று கள ஆய்வுக்குழு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Update: 2020-05-13 22:00 GMT
கோவை,

கோவை மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.

இதில் கள ஆய்வுக்குழு அதிகாரிகளான புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் சரவணவேல்ராஜ், சிட்கோ மேலாண்மை இயக்குனர் ஆர்.கஜலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கி, தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் கள ஆய்வுக்குழு அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இது பாராட்டுக்குரியது. மாநகராட்சி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் மற்றும் அந்தப்பகுதியில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் அந்தப்பகுதிகளில் தினமும் 3 முறை கிருமி நாசினி தெளிக்கும் பணியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதை பின்பற்றுவதுடன், கடைகளில் கூட்டம் அதிகமாக கூடுவதை கண்காணித்து, அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

முகக்கவசம் அணியாமல் வெளியே செல்பவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். பிறமாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்து உள்ளவர்களை கண்காணித்து, அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரிகள் காந்திமதி (முத்திரைத்தாள்), கலைவாணி (கலால்), நகர்நல அதிகாரி சந்தோஷ்குமார், மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன், சுகாதார துணை இயக்குனர் அருணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்