ஆய்வு நடத்த அதிகாரிகள் வந்ததால் கேரட் மூட்டைகளை ரோட்டோரத்தில் வீசிய வியாபாரிகள் - மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் பரபரப்பு

மேட்டுப்பாளையம் புதிய மார்க்கெட்டில் அதிகாரிகள் ஆய்வு நடந்த வந்தால், கேரட் மூட்டைகளை வியாபாரிகள் ரோட்டோரத்தில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-13 22:45 GMT
மேட்டுப்பாளையம், 

மேட்டுப்பாளையம்-அன்னூர் ரோட்டில் புதிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் நேற்று முன்தினம் கோவை வடக்கு கோட்டாட்சியார் சுரேஷ் ஆய்வு நடத்தி அனுமதியின்றி செயல்பட்ட 70 மண்டிகளுக்கு அபராதம் விதித்தார். மேலும் தினமும் மார்க்கெட்டை கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று மதியம் 12 மணிக்கு தாசில்தார் சாந்தாமணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 1 மணிக்குள் விற்பனை முடிந்த காய்கறி மண்டிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. காய்கறி ஏற்றிய லாரிகள் அனைத்தும் ஒரு மணிக்குள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் மண்டிகளில் இருந்து அவசர அவசரமாக லாரிகளில் காய்கறிகள் ஏற்றப்பட்டு மார்க்கெட்டில் இருந்து வெளியே வந்து ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டன. ஒரு மண்டியில் வியாபாரம் முடிந்து கேரட் மூட்டைகளை ஏற்றிச்செல்ல லாரி வரவில்லை. விற்பனை நேரம் முடிந்ததால் அந்த மண்டிக்கு சீல் வைக்கப்படும் என்று வருவாய்த்துறையினர் எச்சரித்ததால், மண்டியில் இருந்து கேரட் மூட்டைகளை, மண்டியின் அருகே ரோட்டோரத்தில் வீசிவிட்டு மண்டியை பூட்டிவிட்டு வியாபாரிகள் சென்றுவிட்டனர். அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கேரட் மூட்டைகளை லாரியில் ஏற்றிச் செல்ல அனுமதிக்கும்படி மண்டி உரிமையாளர்கள் தாசில்தார் சாந்தாமணியிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு தாசில்தார், காய்கறி மூட்டைகளை ஏற்றிச்செல்ல ஒரு லாரி மட்டும் அனுமதிக்க முடியும். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து அந்த மூட்டைகளை லாரியில் ஏற்றி சென்றனர். அப்போது அவருடன் துணை தாசில்தார் செல்வராஜ், நில வருவாய் ஆய்வாளர் சத்யராஜ், கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்