குன்னூர் மார்க்கெட்டில் கடைகளை திறக்க அனுமதி வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

குன்னூர் மார்க்கெட்டில் கடைகளை திறக்க அனுமதி வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2020-05-13 22:15 GMT
குன்னூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர, மற்ற பகுதிகளில் மளிகை, காய்கறி, பழங்கள் உள்பட 34 வகையான கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதிக்கப்பட்ட கடைகள் திறந்து செயல்பட்டு வருகிறது.

குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று மார்க்கெட் கடைகளை திறக்க அனுமதி வழங்கக்கோரி வியாபாரிகள் குன்னூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக இடைவெளியுடன் கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து நகராட்சி கமிஷனர் பாலு, வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வியாபாரிகள் கூறும்போது, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர, மற்ற இடங்களில் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இருக்கிறது. நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகளை திறக்கக்கூடாது என்று வருவாய்த்துறையினர், போலீசார் கெடுபிடி செய்கிறார்கள். எனவே கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.

அதற்கு கமிஷனர் கூறும்போது, குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகள் நெருக்கமாக உள்ளன. இதனால் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது. இதுகுறித்து குன்னூர் சப்-கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்ற பின்னர் அனுமதி கொடுப்பது குறித்து தெரிவிக்கப்படும் என்றார். இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்