ஊரடங்கு உத்தரவு: ‘ஸ்ட்ராபெர்ரி’ பழங்கள் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
ஊரடங்கு உத்தரவால் ‘ஸ்ட்ராபெர்ரி’ பழங்கள் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து இருக்கின்றனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேயிலை விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இதனால் வருமானத்தை ஈடுகட்ட சிறு விவசாயிகள் மலைக்காய்கறி மற்றும் பழ சாகுபடியில் ஈடுபட தொடங்கினர். பழ சாகுபடியில் பிளம்ஸ், பேரி போன்ற பழ வகைகளை சாகுபடி செய்தாலும், தனி பயிராக ‘ஸ்ட்ராபெர்ரி’ பழ சாகுபடியையும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். ‘ஸ்ட்ராபெர்ரி’ பழங்கள் உள்நாடுகளில் விற்பனை செய்யப்படுவது மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனால் நீலகிரியில் விளைவிக்கப்படும் ‘ஸ்ட்ராபெர்ரி’ பழங்களுக்கு நல்ல விலை கிடைத்தது. இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள் மூடப்பட்டு இருக்கிறது. இதனால் வெளிமாவட்டங்களுக்கு வாகனங்கள் செல்வது குறைந்து உள்ளது. அதன் காரணமாக அறுவடை செய்த ‘ஸ்ட்ராபெர்ரி’ பழங்களை வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
குன்னூர் அருகே கரும்பாலம் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் ‘ஸ்ட்ராபெர்ரி’ பயிரிடப்பட்டு உள்ளது. அறுவடைக்கு தயாராகியும் பழங்களை கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்ப முடியாமல் உள்ளது. இதனால் ஒரு கிலோ ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.100-க்கு விற்பனை ஆகிறது. விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால், தொழிலாளர்களை கொண்டு அறுவடை செய்யாமல் சிலர் அப்படியே விட்டு உள்ளனர். இதனால் ‘ஸ்ட்ராபெர்ரி’ பழங்கள் செடிகளிலேயே உதிர்ந்து கீழே விழுகின்றன.
இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் அறுவடை செய்த பழங்களை சேமித்து வைக்க குளிர்சாதன எந்திரம் இல்லாததால், பழங்கள் அழுகி வீணாகும் நிலை உள்ளது.
இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.