ஒரே குடும்பத்தில் 4 பேர் உள்பட சென்னையில் இருந்து குமரிக்கு வந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு 31 ஆக உயர்ந்தது
சென்னையில் இருந்து குமரிக்கு வந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது.
கன்னியாகுமரி,
சென்னையில் இருந்து குமரிக்கு வந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது.
தனிமைப்படுத்தி கண்காணிப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக இருந்தது. அவர்களில் மயிலாடியை சேர்ந்த 65 வயது முதியவர் கொரோனாவுக்கு பலியானார். இவர் தான் குமரியில் கொரோனாவில் பாதிக்கப்பட்டு இறந்த முதல் நபர். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 16 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். 5 வயது குழந்தை உள்பட 2 பேர் சென்னை மற்றும் கேரளாவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் குமரி மாவட்டம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கல்லூரிகள், விடுதிகள் போன்றவற்றில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் 5 பேருக்கு கொரோனா
இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
குமரியில் இருந்து சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்ட மயிலாடியைச் சேர்ந்த 65 வயது முதியவர், உடல்நிலை மோசம் அடைந்ததால் மீண்டும் குமரிக்கு அழைத்து வரப்பட்டார். அதாவது, கடந்த 9-ந் தேதி ஆம்புலன்ஸ் மூலம் குமரிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அங்கு அவர் சிறிது நேரத்தில் இறந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து சென்னையில் இருந்து அவருடன் வந்த 38 வயது மகளுக்கு, முதலில் பரிசோதனை செய்தபோது கொரோனா இல்லை. இதையடுத்து அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்த போது, கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரே குடும்பத்தில் 4 பேர்
இதேபோல் நாகர்கோவில் அருகே உள்ள ஆளூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 45 வயது கணவர், 40 வயது மனைவி, 14 வயது, 12 வயது பிள்ளைகள் என 4 பேர் சென்னையில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் அவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து குமரி மாவட்டம் வந்தனர். அவர்களுக்கு ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
31 ஆக உயர்வு
பின்னர் அனைவரையும் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்க வைத்திருந்தனர். நேற்று அவர்கள் 4 பேருக்கும் பரிசோதனை முடிவு வந்தது. அதில் 4 பேருக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளையும், டாக்டர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது குமரி மாவட்ட மக்களுக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று கண்டறியப்பட்ட 5 பேருடன் சேர்த்து குமரியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. புற்று நோயாளியின் மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பதால் மயிலாடி பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.