ஆந்திர மாநில வனப்பகுதிக்கு விரட்டப்பட்ட காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்

ஆந்திர மாநில வனப்பகுதிக்கு விரட்டப்பட்ட காட்டு யானைகள் குடியாத்தம் பகுதிக்கு மீண்டும் வந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.

Update: 2020-05-14 00:10 GMT
குடியாத்தம், 

ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து வரும் காட்டு யானைகள் குடியாத்தம் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. வேலூர் முதன்மை வனப்பாதுகாவலர் சேவாசிங், மாவட்ட வன அலுவலர் பார்கவ் தேஜா, உதவி வனப்பாதுகாவலர் முரளிதரன் ஆகியோரின் முயற்சியின் காரணமாக ஓசூர் பகுதியில் இருந்து 15 யானை தடுப்பு காவல் படையினர் குடியாத்தத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையில் குடியாத்தம் வனத்துறையினர், பொதுமக்கள் இணைந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு பல கிலோ மீட்டர் தூரம் யானைகளை விரட்டி ஆந்திர மாநிலம் மொகிலி வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர். இதனால் கடந்த 5 நாட்களாக விவசாயிகள், வனத்துறையினர் நிம்மதி அடைந்த நிலையில், ஆந்திர மாநில வனத்துறையினர், அந்த யானைகளை தமிழக பகுதிக்குள் மீண்டும் விரட்டிவிட்டனர்.

இதனால் நேற்று அதிகாலையில் குடியாத்தம் அடுத்த தனகொண்டப்பள்ளி மற்றும் குடிமிப்பட்டி பகுதிகளில் யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களுக்குள் புகுந்து ஏராளமான மரங்களை சேதப்படுத்தியது.

அதேபோல் கொத்தூர் பகுதியிலும் ஒற்றை யானை ஒன்று நிலங்களுக்குள் புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகளை மீண்டும் ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர். அந்த யானைகளை தமிழக வனப்பகுதிக்குள் மீண்டும் விரட்டாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் ஆந்திர மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என விவசாயிகளும், வனத்துறையினரும் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்