மராட்டியத்தில் வீட்டுக்கு சென்று மது விற்பனை - நாளை அமலுக்கு வருகிறது
மராட்டியத்தில் வீடுகளுக்கு சென்று மதுவிற்பனை செய்யும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.;
மும்பை,
மராட்டியத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக சில மாவட்டங்களை தவிர்த்து மாநிலத்தின் மற்ற பகுதிகளில் கடந்த வாரம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால் சமூக விலகலை கடைபிடிக்காமல் குடிமகன்கள் மதுக்கடைகள் முன் திரண்டதால் சமூக விலகல் காற்றில் பறந்தது.
இதையடுத்து, கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் மும்பையில் மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்தநிலையில், மதுக்கடைகள் முன் கூட்டம் திரளுவதை தடுக்கும் நடவடிக்கையாக வீட்டுக்கு சென்று மது விற்பனை செய்யும் திட்டத்தை மாநில அரசு அறிவித்தது. இந்த திட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி வீடுகளுக்கு சென்று விற்பனை செய்ய ஒரு கடை உரிமையாளர் 10 டெலிவரி செய்யும் ஊழியர்களை மட்டுமே நியமித்து கொள்ளலாம். ஒவ்வொருவரும் 24 பாட்டில்களுக்கு மேல் மதுபானத்தை எடுத்து செல்ல முடியாது.
சமூக விலகல்
மேலும் கடை உரிமையாளர்கள் மதுபாட்டிலில் உள்ள எம்.ஆர்.பி. விலைக்கு மேல் கட்டணம் வசூலிக்க கூடாது. ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்வது விற்பனையாளருக்கும், வாங்குபவருக்கும் இடையிலான எழுதப்படாத ஒப்பந்தமாகும். எனவே அவர்களுக்கு இடையே எந்தவொரு பிரச்சினைக்கும் அரசு காரணமாகாது. ஆன்லைனில் விற்பனை செய்தாலும் மதுபான கடைகளில் ஊழியர்கள் சமூக விலகல் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
இந்த தகவல் கலால்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே புனே நகரில் சோதனை முயற்சியாக மது விற்பனைக்காக ஆன்லைன் இ-டோக்கன் முறை நேற்று அமல்படுத்தப்பட்டது. முதல் நாளான நேற்று 1,000 இ-டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டது.