தஞ்சை மாவட்டத்தில், இந்த ஆண்டு குடிமராமத்து திட்டத்தில் 107 பணிகள் கலெக்டர் தகவல்

தஞ்சை மாவட்டத்தில் இந்த அண்டு குடிமராமத்து திட்டத்தில் 107 பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கலெக்டர் கூறினார்.

Update: 2020-05-13 23:34 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் இந்த அண்டு குடிமராமத்து திட்டத்தில் 107 பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கலெக்டர் கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்புப்பணிகள் மற்றும் குடிமராமத்து பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் உள்ள வெளிமாநில பணியாளர்கள் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு விருப்பமுள்ளவர்களின் விவரங்களை வாங்க வேண்டும். தற்போது வரை பீகார், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், ஜார்கண்ட் உள்பட 30 மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 171 பேர், அவர்களின் சொந்த மாநிலத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்து இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

8 சோதனை சாவடிகள்

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து தஞ்சைக்கு வருபவர்களை மாவட்டத்தின் 8 சோதனை சாவடிகளிலும் தீவிரமாக கண்காணித்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்திருந்தால், அவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும். அதன் முடிவு வரும் வரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தங்க வைக்க வேண்டும்.

குடிமராமத்து பணி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டினை மையமாக வைத்து, 5 கிலோ மீட்டர் சுற்றளவில் சீல் வைத்த பகுதியாக கணக்கிடப்படுகிறது. தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களின் சிரமங்களை குறைப்பதற்காக, பாதிக்கப்பட்டவரின் தெரு மற்றும் தொடர்புடைய தெருக்களை மட்டும் சீல் வைக்கப்பட்ட பகுதியாக கணக்கிடவும், 28 நாட்கள் முடிவுற்று புதிய தொற்றுகள் ஏற்படாமலிருந்தால், அந்த பகுதியை சீல் வைக்கப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கவும் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளலாம். குடிமராமத்து திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு 107 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உமா மகேஸ்வரி, தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர்(பொறுப்பு) டாக்டர். மருததுரை, முன்னாள் முதல்வர் டாக்டர் குமுதா லிங்கராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள் வேலுமணி(தஞ்சை), வீராசாமி (கும்பகோணம்), வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜஸ்டின், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்