பூதலூர் அருகே பரிதாபம்: வயலில் மேய்ந்து கொண்டிருந்த 5 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி சாவு

பூதலூர் அருகே மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் வயலில் மேய்ந்து கொண்டு இருந்த 5 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தன.

Update: 2020-05-13 22:58 GMT
திருக்காட்டுப்பள்ளி,

பூதலூர் அருகே மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் வயலில் மேய்ந்து கொண்டு இருந்த 5 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தன.

மின்சாரம் தாக்கி 5 பசுமாடுகள் சாவு

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள கோட்டரப்பட்டி கிராமத்தில் உள்ள வயல் வெளியில் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலரது மாடுகள் நேற்று மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது வயல்வெளியில் விவசாய பம்புசெட்டுக்காக சென்று கொண்டிருந்த மின்சார கம்பி திடீரென அறுந்து மேய்ந்து கொண்டிருந்த மாடுகளின் மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி 5 பசு மாடுகளும் வயலிலேயே சுருண்டு விழுந்து இறந்தன.

சோகத்தில் ஆழ்ந்த கிராமம்

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த கிராமத்தினர் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து இறந்து கிடந்த பசுமாடுகளை பார்த்து வேதனை அடைந்தனர். மின்சாரம் தாக்கி இறந்த பசுமாடுகள் கோட்டரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ், பிரான்சிஸ், ஆரோக்கியசாமி மகன் பீட்டர், அம்புரோஸ், சவரிநாதன் மகன் பீட்டர் ஆகியோருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.

ஒவ்வொரு பசுமாடும் ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ளது என்றும் அந்த மாடுகள் தற்போது பால் கொடுத்து கொண்டிருந்தது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். மின்சாரம் தாக்கி பசுமாடுகள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்