நெல்லையில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு கொரோனா பாதிப்பு

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டாக்டர், நர்சுகள் உள்பட 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். நெல்லையில் மேலும் 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2020-05-13 23:45 GMT
நெல்லை, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் ஏற்கனவே 35 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஒருவருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்து உள்ளது.

தற்போது பாதிக்கப்பட்டவர், ராமநாதபுரம் கடலாடி பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் நரம்பு பாதிப்பு காரணமாக அவதிப்பட்டார். இதனால் சென்னையில் இருந்து லாரி மூலம் தூத்துக்குடி குறுக்குச்சாலைக்கு வந்தார். அங்கிருந்து உறவினர் உதவியுடன், ராமநாதபுரத்தில் இருந்து வருவதாக கூறி தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவர் சென்னையில் இருந்து வந்தது தெரியவந்ததால், உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அரசு ஆஸ்பத்திரி டீன் ரேவதி மேற்பார்வையில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அதனை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவு மூடப்பட்டது. மேலும் அந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததால், அங்குள்ள நர்சு, டாக்டர் உள்பட 20 பேருக்கு சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று முன்தினம் நிலவரப்படி நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நெல்லை மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் பரிசோதனை செய்யப்பட்ட முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மானூர் அருகே உள்ள ரஸ்தாவை சேர்ந்த பல்வேறு நபர்கள் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகின்றனர். இதில் 3 குடும்பத்தினர் மும்பையில் இருந்து காரில் கைக்குழந்தை உள்பட 11 பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு அவர்கள் வந்த கார், கங்கைகொண்டானில் உள்ள சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில் பெண் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் ரஸ்தாவில் உள்ள ஒரு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏற்கனவே சிறுநீரக கோளாறு காரணமாக மாதந்தோறும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்று வந்தார். சமீபத்தில் சென்றபோது அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் அங்கேயே தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

நெல்லை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் குடியிருப்பு பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 3 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அதில் ஒருவர் மேலப்பாளையத்தை சேர்ந்த பெண். மற்ற 2 பேர் புளியங்குடியை சேர்ந்தவர்கள்.

மேலும் செய்திகள்