ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொலிவு பெறுகிறது: திருப்பூர் பழைய பஸ் நிலைய கட்டிடங்கள் இடிப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர் பழைய பஸ் நிலையம் பொலிவு பெறுகிறது. இதனால் அங்குள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது. தற்காலிக பஸ் நிலையம் கோவில்வழியில் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-05-13 23:00 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாநகரின் இதயப்பகுதியாக பழைய பஸ் நிலையம் விளங்கி வருகிறது. 100 கடைகளோடு பழைய பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. டவுன் பஸ்கள், மினி பஸ்கள் அதிக அளவில் இங்கிருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையத்தை இடித்து புதுப்பொலிவுடன் கட்டுவதற்கும், பஸ் நிலையம் அருகே அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டது.

அதன்படி ரூ.36 கோடியே 50 லட்சத்தில் பழைய பஸ் நிலையம் புதுப்பொலிவுடன் கட்டப்பட உள்ளது. ரூ.18 கோடியே 10 லட்சம் மதிப்பில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைய இருக்கிறது. இதற்காக ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்டது.

தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது. கடைகள், அலங்கார மின்விளக்குகள், அலங்கார நுழைவுவாயில், பொருட்களை இருப்பு வைக்கும் அறை, பயணிகள் ஓய்வு அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டுமான பணிகள் ஏற்கனவே தொடங்கி வருகிறது.

பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் வாடகைக்கு இருந்தவர்கள் அனைவரும் கடையை காலி செய்து விட்டு மாநகராட்சி வசம் ஒப்படைத்து சென்றனர். பணிகள் தொடங்கும் நேரத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பழைய பஸ் நிலைய கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் ஊரடங்கு தளர்வில் பொதுப்பணித்துறையினர் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை தொடங்கவும் அனுமதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று திருப்பூர் பழைய பஸ் நிலைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கியது. கடைகளில் உள்ள இரும்பு கதவுகள் முதலில் அகற்றப்பட்டன. அதன்பிறகு பொக்லைன் எந்திரம் மூலமாக கட்டிடங்கள் இடிக்கும் பணி நடைபெற்றது. இன்னும் சில நாட்கள் இந்த பணிகள் நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் கூறும்போது, பழைய பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கப்பட்டது. அரசு பஸ்கள் இயக்கப்பட்டால் கோவில்வழியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இயக்க வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மாநகராட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்