முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
தென்காசி,
தென்காசி மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வேல்முருகன், தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில், “கொரோனா ஊரடங்கினால் சலூன் கடைகள் கடந்த 2 மாதமாக மூடப்பட்டுள்ளது.
இதனால் தொழிலாளர்கள் பசி பட்டினியாக மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அனைத்து கடைகளும் வாடகை கட்டிடங்களில் இயங்குகிறது. அதற்கு வாடகை கொடுக்க வேண்டும். மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. எனவே வறுமையில் வாடும் இந்த தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
மனுவை மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலர் பெற்றுக்கொண்டு ஆவன செய்வதாக கூறினார். நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் கணபதி, பீடி தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராஜாங்கம், சி.ஐ.டி.யு. தாலுகா தலைவர் லெனின்குமார், முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த பண்டார சிவன், பாலசுப்பிரமணியன், காசி மணி, சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.