மராட்டிய மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 24 பேர் தனிமை வார்டுகளில் அனுமதி
மராட்டிய மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 24 பேர் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பணிகள் நிமித்தமாக வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
கடந்த வாரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரத் தொடங்கி உள்ளனர்.
இதனால் தூத்துக்குடி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர முக்கிய சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில், மருத்துவக்குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களின் விவரங்களை சேகரிக்கின்றனர். தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்கின்றனர். அதன்பிறகு வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் நேரடியாக தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள். வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
24 பேர் தனிமை வார்டில் அனுமதி
இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று கார்களில் மொத்தம் 24 பேர் வந்தனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள தனிமை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
தொடர்ந்து வெளிமாநிலத்தில் இருந்து மக்கள் வருகை அதிகரித்து வருவதால், மாவட்ட எல்லைகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.