சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி கடைகளில் கொரோனா விழிப்புணர்வு பேனர்
திண்டுக்கல்லில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி கடைகளில் கொரோனா விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டது.
திண்டுக்கல்,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனினும், மக்களின் நலன்கருதி தொடக்கத்தில் இருந்தே காய்கறிகள், மளிகை, பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கடைகள் குறிப்பிட்ட நேரம் செயல்பட்டு வந்தன. இதற்கிடையே ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இதனால் கடந்த 1½ மாதங்களாக விரும்பிய பொருட்களை வாங்க முடியாமல், வீட்டுக்குள் முடங்கிய மக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும் பொருட்களை வாங்குவதற்காக கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், நெருக்கமாக நின்று பொருட்களை வாங்கினர். திடீரென கூட்டம் கூடியதால் கடைக்காரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் ஒருசிலர் முக கவசம் கூட அணியவில்லை.
இதையடுத்து கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு, கொரோனா ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி திண்டுக்கல் நகரில் நேற்று பெரும்பாலான கடைகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டது.
அதில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், 1 மீட்டர் தூரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதை தவறினால் கடையில் அனுமதி கிடையாது என்று அச்சிட்டுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மீதமுள்ள கடைகளிலும் பேனர் வைக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர்.