மதுரை பரவை மார்க்கெட்டில் ஒரே நாளில் 46 கடைகளுக்கு ‘சீல்’ - சமூக இடைவெளியை பின்பற்றாததால் கலெக்டர் அதிரடி
மதுரை பரவை மார்க்கெட்டில் ஒரே நாளில் 46 கடைகளுக்கு சீல் வைத்து கலெக்டர் வினய் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.;
மதுரை,
சென்னையில் கோயம்பேடு காய்கறி மார்கெட் மூலம் அதிக அளவில் கொரோனா பரவி உள்ளது. அதே நிலை மதுரைக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக மதுரையில் உள்ள பரவை மார்க்கெட் மற்றும் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்கெட், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் மற்றும் அம்மா திடல் பகுதிக்கு பிரிக்கப்பட்டது.
அதே போல் பரவை மொத்த காய்கறி மார்க்கெட் ஏற்கனவே பாத்திமா கல்லூரி, மங்கையர்கரசி பள்ளி ஆகிய இடங்களுக்கு பிரிக்கப்பட்டது. இருப்பினும் பரவை மார்க்கெட்டில் தொடர்ந்து வியாபாரிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. பரவையில் சில்லறை வியாபாரம் செய்யக்கூடாது என்றும், சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் கலெக்டர் வினய் எச்சரிக்கை செய்து இருந்தார். ஆனால் இந்த எச்சரிக்கையை மீறி பல்வேறு கடைகள் செயல்பட்டன. எனவே கலெக்டர் வினய் அங்கு அடிக்கடி ஆய்வு செய்து, விதிமீறிய கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார். இதுவரை 10-க்கும் மேற்பட்ட கடைகள் சீல் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் பரவை மார்க்கெட் குறித்து கலெக்டர் வினய் ஆலோசனை நடத்தினார். அப்போது பரவை மார்க்கெட் வளாகத்தின் அருகில் உள்ள தனியார் காலியிடத்தில் ஒரு பகுதியில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு மொத்த கடைகள் அமைக்கவும், மறு பகுதியில் கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் கடைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணி நடைபெற்று வருகிறது.
ஆனால் ஏ பிளாக்கில் உள்ள வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு மொத்த வியாபாரிகள் தற்காலிகமாக நகர்வு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. மேலும் அவர்கள் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வியாபாரம் செய்து வந்தனர். இது குறித்து ஆய்வு செய்த கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன் ஆகியோர் அந்த ‘ஏ’ பிளாக்கில் உள்ள 44 கடைகளுக்கும் சீல் வைக்க உத்தரவிட்டனர். மேலும் அந்த பிளாக்கில் உள்ள கடைகளுக்கு யாரும் செல்லாத வண்ணம் ஒட்டுமொத்தமாக தடுப்பு அமைத்தனர். தொடர்ந்து பரவை மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைபிடிக்காத மேலும் 2 கடைகளுக்கும் சீல் வைத்தனர். நேற்று மட்டும் ஒரே நாளில் அங்குள்ள 46 கடைகளுக்கு சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கலெக்டர் வினய் கூறியதாவது:-
கொரோனா நோய் ஒழிப்புக்கு மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பரவை மார்க்கெட்டில் சமூக இடைவெளி மற்றும் அரசின் விதிமுறைகளை பின்பற்ற மறுத்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. பரவை மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகள், லோடுமேன்கள், டிரைவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியினை முறையாக கடைபிடிக்க வேண்டும். மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள், லோடுமேன்கள் என அனைவருக்கும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். பரவை மார்க்கெட்டில் உள்ள அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம், உதவி கமிஷனர்கள் ஜெயராமராஜா, சேகர், பி.எஸ்.மணியன், தாசில்தார்கள் கிருஷ்ணகுமார், சுரேஷ், அனீஷ், கோபி, உதவிசெயற்பொறியாளர் சுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவிபொறியாளர் மணியன் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.