அரசு உதவி வழங்ககோரி 10 ஆயிரம் மனுக்கள் கலெக்டரிடம் ஒப்படைப்பு - சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்கள் கொடுத்த 10 ஆயிரம் மனுக்களை அரசு உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டரிடம் கொடுத்துள்ளதாக சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Update: 2020-05-13 07:44 GMT
விருதுநகர், 

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை தி.மு.க. எம்.பி. தனுஷ்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தங்கப்பாண்டியன் ஆகியோர் கலெக்டர் கண்ணனை சந்தித்தனர். அப்போது அவர்கள் மாவட்ட மக்களின் கோரிக்கை மனுக்களை அரசின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யுமாறு கொடுத்தனர். இதனை தொடர்ந்து சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் பொதுமக்களுடன் இணைந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் கீழ் இதுவரை உணவு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கோரி தி.மு.க. தலைமைக்கு 15 லட்சம் கோரிக்கைகள் வந்துள்ளன. இதுவரை ஒரு வேளை உணவுக்கு கூட வசதி இல்லாத 16 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது மிக அதிகமாக கோரிக்கை மனுக்கள் வரும் நிலையில் அரசும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் பங்கேற்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி இம்மாவட்டத்தில் பல்வேறு உதவிகள் கேட்டு எங்களுக்கு மனுக்கள் அனுப்பி உள்ள 10 ஆயிரம் பேரின் பெயர், முகவரி அடங்கிய கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கி உள்ளோம். இவர்களுக்கு அரசு சார்பில் உதவிகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். எனினும் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து உதவி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்