சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை வடமாநிலத்தினர் முற்றுகை
ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கியுள்ள வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களை சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்குமாறு கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம்,
மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உயிர்பலி வாங்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்து வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் பேக்கரிகள், கட்டுமான தொழில், ஓட்டல்கள் போன்றவற்றில் வேலை பார்த்து வரும் ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் அவரவர் வேலை பார்க்கும் இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை ஒடிசா, அசாம் மாநிலங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அசாம், ஒடிசா மாநிலங்களை சேர்ந்த 58 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓட்டல், பேக்கரி, கட்டிட தொழில் செய்து வருவதாகவும் தற்போது வேலை இல்லாமல் அவதிப்படுவதாகவும், எனவே தங்களை உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்த கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து இதுபோன்ற சமயங்களில் கூட்டமாக வரக்கூடாது தங்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலம் ஓரிருவர் மட்டும் வந்து தெரிவித்தால் மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று அறிவுரை கூறினர். மேலும் போலீசார் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் அழைத்து சென்றனர். வடமாநிலத்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் வரிசைப்படியும், அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் அந்தந்த மாநிலங்களில் தனிமைப்படுத்த ஏற்பாடுகள் போன்றவற்றை செய்த பின்னரே அனுப்ப முடியும் என்பதால் அதற்கான நடைமுறைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர். ஓரிரு நாளில் நடைமுறைகள் முடிந்ததும் அனுப்பி வைக்கப்படுவீர்கள் என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.