மதுரையில் இருந்து சரக்கு விமான சேவை தொடக்கம் - சென்னை, பெங்களூரு நகரங்களுக்கு இயக்கம்

மதுரையில் இருந்து நேற்று முதல் சரக்கு விமான சேவை தொடங்கியது. முதல்கட்டமாக பெங்களூரு, சென்னை நகரங்களுக்கு விமானம் இயக்கப்பட்டது.

Update: 2020-05-13 07:02 GMT
மதுரை, 

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 25 பயணிகள் விமானங்கள் மற்றும் 4 சரக்கு விமானங்கள் சேவை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மதுரை விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் 144 தடை உத்தரவில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அதில் சரக்கு விமான சேவைக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 49 நாட்களுக்கு பிறகு மதுரையில் இருந்து வெளி மாநிலத்துக்கு சரக்கு விமான சேவை நேற்று தொடங்கியது.

அதாவது, தனியார் நிறுவனம் மதுரையிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு சரக்கு விமான சேவையை தொடங்கியது. இதற்காக நேற்று கோவையில் இருந்து மருந்துகள், தபால்கள் மற்றும் தனியார் கம்பெனியின் எந்திரங்கள் மதுரை வந்தடைந்தன. அந்த பொருட்களுடன் மதுரையில் இருந்து பல பொருட்களும் அந்த சரக்கு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், இன்றும், நாளையும் (13, 14-ந் தேதிகள்) அந்த நகரங்களுக்கு சரக்கு விமான சேவை இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் விமான கட்டணம் அதிகமாக இருப்பதன் விளைவாக மதுரை மல்லிகைப்பூ ஏற்றுமதியில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் சரக்கு விமான சேவையை அதிகப்படுத்தும் போது, சரக்கு விமான கட்டணம் குறையும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்