அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 35 பேர் வீடு திரும்பினர்

அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 35 பேர் நேற்று வீடு திரும்பினர்.

Update: 2020-05-13 06:50 GMT
அரியலூர்,

அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 35 பேர் நேற்று வீடு திரும்பினர்.

35 பேர் குணமடைந்தனர்

அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் நோய் தனிப்பிரிவில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 35 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

தற்போது அவர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது வீட்டிற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பழங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி 14 நாட்கள் தனிமையில் அவர்களது வீடுகளில் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து வருகை புரிந்தவர்களில் 525 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 301 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 224 நபர்களுக்கு தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதன் விளைவாக அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும், எந்தவித அறிகுறியும் இல்லாதவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக்குழுவினரின் கண்காணிப்பிலும் இருந்து வருகின்றனர்.

ஒத்துழைக்க வேண்டும்

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரத்னா கூறுகையில், இன்று (அதாவது நேற்று) அரியலூர் அரசு மருத்துவ மனையில் கொரோனா தொற்று நேரடி பாதிப்பு ஏற்பட்ட 24 ஆண்களும், தொற்று ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 9 பெண்களும், 2 குழந்தைகளும் என 35 நபர்கள் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வீட்டிற்கு ஒருவர் என வெளியில் வரும்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு என்பதை கடைபிடிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்