பெரம்பலூரில் ஜவுளி கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் சேலைகள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பெரம்பலூரில் ஜவுளி கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் சேலைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் ஜவுளி கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் சேலைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருட்டு
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தசதர்சிங்(வயது 44). இவர் பெரம்பலூர் கடைவீதியில் ஜவுளிகடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது கடையை ஊரடங்கு அமலில் உள்ள கடந்த 2-ந் தேதி திறந்துள்ளார். பின்னர் கடையை தூய்மை செய்துவிட்டு பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இதனிடையே ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், நேற்று காலை மீண்டும் கடையை திறந்துள்ளார். அப்போது கடையின் பக்கவாட்டு சந்தில் பின்பகுதியில் உள்ள இரும்பு ஷட்டர் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தம் புதிய சேலைகள், சுடிதார்கள் மற்றும் பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம் ஆகியவை திருடுபோயிருந்தது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தசதர்சிங் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மோப்பநாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் இந்த திருட்டு குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.