கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கர்ப்பிணி உள்பட 4 பேருக்கு கொரோனா
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கர்ப்பிணி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கர்ப்பிணி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 4 பேர்
கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 42 பேர், கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று, குணம் அடைந்து வீடு திரும்பினர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரப்பாளையம் பகுதியை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், மராட்டிய மாநிலத்தில் இருந்து பள்ளப்பட்டிக்கு வந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் பள்ளப்பட்டியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவருக்கும், 33 வயதுடைய ஒருவருக்கும், 43 வயதுடைய ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் கரூர் அருகே உள்ள உழைப்பாளி நகர் பகுதியை சேர்ந்த 23 வயது கர்ப்பிணிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் கர்ப்பிணிக்கு கொரோனா அறிகுறி இல்லாத நிலையில், பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
தடுப்புகள் அமைப்பு
இதையடுத்து உழைப்பாளி நகர் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளதுடன் வெளி ஆட்கள் யாரும் அப்பகுதிக்குள் நுழையாமல் இருக்க தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்றது. ஏற்கனவே கரூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் தற்போது 4 பேரையும் சேர்த்து மொத்தம் 10 பேரும், திண்டுக்கல் மாவட்டதை சேர்ந்த 18 பேரும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 29 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.