கோவையில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 4,246 பேர் சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
கோவையில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 4,246 பேர் சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோவை,
கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதியில் ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம் உள்பட வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
எனவே அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டு, இதற்காக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கோவையில் இருந்து ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயிலில் பயணம் செய்வதற்காக வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் நேற்று காலையில் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.
அங்கு அவர்கள் அனைவரும் சமூக இடைவெளி விட்டு நின்றிருந்தனர். பிற்பகல் 12 மணியளவில் கோவையில் இருந்து ஒடிசா மாநிலம் குர்தார் என்ற பகுதிக்கு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் மூலம் கோவை மாவட்டத்தில் தங்கி இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அந்த ரெயில் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
அதுபோன்று மாலை 4 மணிக்கு பீகார் மாநிலம் முசாபுர் என்ற பகுதிக்கும், இரவு 9 மணிக்கு பீகார் மாநிலம் ஜெய்சீபிந்த் என்ற பகுதிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில்கள் மூலம் கோவையில் தங்கி இருந்து வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கள் ஊருக்கு புறப்பட்டனர்.
இது குறித்து கோவை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்து வருகிறார்கள். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவிப்பவர்கள், சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று ஒடிசாவுக்கு 1,318 பேரும், பீகார் மாநிலத்துக்கு 2 சிறப்பு ரெயில்கள் மூலம் 2,928 பேர் என்று மொத்தம் 4,246 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை கோவை மாவட்டத்தில் தங்கி இருந்த ஒடிசா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், ராஜஸ்தான் உள்பட வடமாநிலங்களை சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 9 சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
வடமாநிலத்தை சேர்ந்த வேறு யாராவது சொந்த ஊருக்கு செல்ல விருப்பத்துடன் உள்ளார்களா என்பது குறித்து கணக்கெடுத்து வருகிறோம். ஊருக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக வருவாய்த்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.