கரூர் மாவட்டத்தில் ஓட்டல்களில் உணவு விலை ஏற்றம் தொழிலாளர்கள் பாதிப்பு

கரூர் மாவட்டத்தில் ஓட்டல்களில் உணவு விலை ஏற்றப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல் உணவு சாப்பிடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-05-13 03:53 GMT
கரூர், 

கரூர் மாவட்டத்தில் ஓட்டல்களில் உணவு விலை ஏற்றப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல் உணவு சாப்பிடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டல்கள்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து கரூர் மாவட்டத்தில் மின் சாதன பொருட் கள் விற்பனை கடைகள், வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறைகள், சிறிய அளவிலான துணி கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட கடைகள் மற்றும் டெக்ஸ்டைல், கொசு வலை உற்பத்தி, பஸ் பாடி கட்டுதல் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டு, 30 சதவீத தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகின்றன.

இந்நிலையில் ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் பார்சல் மட்டுமே தர அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவும், போதிய அளவில் தொழிலாளர்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களாலும் பெரும்பாலான ஓட்டல்கள் திறக்கப்படாமல் உள்ளன. மேலும் தள்ளுவண்டி டிபன் கடைகளும் செயல்படவில்லை.

தொழிலாளர்கள் பாதிப்பு

கரூர் மாவட்டத்தில் சில ஓட்டல்களே திறந்துள்ள நிலையில், தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் சில அரசுத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் ஓட்டல்களை உணவுக்காக தேடிச்செல்லும் நிலை உள்ளது. இதனை பயன்படுத்தி சில ஓட்டல்களில் உணவுகளின் விலையை ஏற்றியுள்ளனர். இதனால் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் ஊழியர்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.இது பற்றி ஓட்டல் உணவு சாப்பிடும் தொழிலாளர்கள் சிலர் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக தொழில் நிறுவனங்கள் குறைந்த அளவிலான தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகின்றன. நாங்கள் ஓட்டல் உணவை சாப்பிடும் நிலையில், ஓட்டல்களில் 6 ரூபாய்க்கு விற்ற ஒரு இட்லி ரூ.10-க்கும், 10 ரூபாய்க்கு விற்ற தோசை ரூ.15 முதல் ரூ.20 வரையிலும், ரூ.30-க்கு விற்கப்பட்ட கலவை சாப்பாடு ரூ.50 வரையிலும், ரூ.60-க்கு விற்கப்பட்ட சாப்பாடு ரூ.80 வரையிலும் விற்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று கூறினர்.மேலும் உணவு பண்டங்களின் விலையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்