ஊரடங்கால் மூடப்பட்ட தரைக்கடைகளில் மீண்டும் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகள் மனு

ஊரடங்கால் மூடப்பட்ட தரைக்கடைகளில் மீண்டும் வியாபாரம் செய்ய அனுமதிக்கவேண்டும் என கோரி கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.

Update: 2020-05-13 02:29 GMT
திருச்சி, 

ஊரடங்கால் மூடப்பட்ட தரைக்கடைகளில் மீண்டும் வியாபாரம் செய்ய அனுமதிக்கவேண்டும் என கோரி கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.

ஊரடங்கில் தளர்வு

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந்தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் சிறிது தளர்வு ஏற்படுத்தி 34 வகையான கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த அனுமதியின் அடிப்படையில் திருச்சியில் நேற்று முன்தினம் டீ கடைகள் உள்பட பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.திருச்சி பெரிய கடைவீதி, என்.எஸ்.பி. சாலை, சின்ன கடைவீதி, சிங்கார தோப்பு ஆகிய பகுதிகளில் உள்ள சிறிய அளவிலான நகை கடைகள், குளிர்பதன வசதி செய்யப்படாத ஜவுளி கடைகள் திறக்கப்பட்டன. இதனால் கடைவீதி களை கட்டியது. ஆனாலும் என்.எஸ்.பி. சாலையில் உள்ள தரைக்கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தரைக்கடை வியாபாரிகள் மனு

இந்நிலையில் மனித நேய வர்த்தக நல சங்கத்தினர் அதன் தலைவர் கபீர் அகமது தலைமையில் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், ஊரடங்கு உத்தரவினால் தரைக்கடை வியாபாரிகளான நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். பெரிய கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தரைக்கடைகள் திறப்பதற்கு போலீசார் அனுமதி மறுத்து வருகிறார்கள். எனவே மலைக்கோட்டை, என்.எஸ்.பி. சாலை, பர்மா பஜார், தெப்பகுளம் பகுதிகளில் தரைக்கடை நடத்துவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இதே போல் திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தரைக்கடை, சிறு வியாபாரிகள் சங்கத்தினர் அதன் தலைவர் அன்சர்தீன் தலைமையில் வந்து நந்திகோவில் தெரு, தெப்பகுளம் பகுதிகளில் தரைக்கடைகளை திறந்து வியாபாரம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்