கன்னியாகுமரியில் முக கவசம் அணியாத 11 வியாபாரிகளுக்கு அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை

கன்னியாகுமரியில் காய்கறி மார்க்கெட்டில் முக கவசம் அணியாத 11 வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.;

Update: 2020-05-13 02:00 GMT
கன்னியாகுமரி, 

கன்னியாகுமரியில் காய்கறி மார்க்கெட்டில் முக கவசம் அணியாத 11 வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

காய்கறி மார்க்கெட்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கன்னியாகுமரி சர்ச் ரோட்டில் இட நெருக்கடியான இடத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு அந்த இடத்தில் சமூக இடைவெளியுடன் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள், காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதாக பல புகார்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் அறிவுறுத்தலின் பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ் தலைமையில் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் சந்திரகுமார், ஏசுதாஸ் மற்றும் அதிகாரிகள் கன்னியாகுமரியில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

அபராதம் விதிப்பு

இதில் முக கவசம் அணியாத 11 வியாபாரிகளுக்கு தலா ரூ.100 வீதம் மொத்தம் ரூ.1,100 அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக ஆய்வு செய்ய வரும் போது வியாபாரிகள் முக கவசம் அணியாவிட்டால் தலா ரூ.500 அபராதம் விதிக்கப்படும், பொதுமக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்