கோவை அருகே, வாலிபர் எரித்துக் கொலை - யார் அவர்? போலீஸ் விசாரணை

கோவை அருகே வாலிபர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-05-12 22:30 GMT
இடிகரை,

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையம் புது பாலத்தின் கீழ் பகுதியில் பாதி எரிந்த நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரிதீவ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள், அங்கு எரிந்த நிலையில் கிடந்த பிணத்தை பார்வையிட்டனர். பிணமாக கிடந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும் என்பது தெரிந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. வாலிபர் பிணமாக கிடந்த இடத்தின் அருகே ரத்தம் அதிகஅளவில் உறைந்து கிடந்தது. இதனால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு, பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் அவர் யார்? என்று அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை சிதைத்து தீ வைத்து எரித்துள்ளனர்.

இதையடுத்து கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அனிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு மணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இறந்து கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது, மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அங்கு வரவழைக்கப்பட் டனர். பின்னர் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

வாலிபரை கொலை செய்து தீ வைத்து எரித்தவர்கள் யார்? கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்