நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க மத்திய பா.ஜனதா அரசே நேரடி காரணம் - சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க மத்திய பா.ஜனதா அரசே நேரடி காரணம் என்று சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனாவை தடுப்பதில் மத்திய-மாநில அரசுகள் தோல்வி அடைந்துவிட்டன. நமது நாட்டில் கடந்த ஜனவரி 30-ந் தேதி முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். இதை மேலும் பரவாமல் தடுக்க பிப்ரவரி, மார்ச் ஆகிய 2 மாதங்கள் கால அவகாசம் இருந்தது. ஆனால் ஊரடங்கை மார்ச் 25-ந் தேதி தான் அமல்படுத்தினர்.
அதற்கு முன்பே நிறைய காலஅவகாசங்கள் இருந்தன. ஜனவரி மாதமே விமான போக்குவரத்தை நிறுத்தியிருக்க வேண்டும். விமானங்களை நிறுத்தியிருந்தால், நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டு இருக்காது. தப்லிக் அமைப்பு மூலம் கொரோனா பரவியதாக தகவல்களை பரப்பு கிறார்கள்.
போலீசாரின் அனுமதி
இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் எந்த தப்லிக் அமைப்புகளை சேர்ந்தவர்கள் இருந்தனர். அங்கு கொரோனா ஏன் இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்லிக் அமைப்பினர் மீது குற்றம்சாட்டுவது அரசியல் சதி. இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சதி செய்கிறார்கள்.
தப்லிக் ஜமாத் அமைப்பினர், டெல்லியில் போலீசாரின் அனுமதி பெற்று மாநாடு நடத்தினர். அங்கு போலீஸ் துறை யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. அந்த மாநாட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்?. நாட்டில் கொரோனா அதிகரிப்புக்கு மத்திய அரசே காரணம். தப்லிக் ஜமாத்தினர் மீது குற்றம்சாட்டுவது, மதவாதிகளின் சதி ஆகும்.
தொழிலாளர்களுக்கு உதவி
வேளாண்மை சந்தை, தொழிலாளர் சட்டங்களுக்கு அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளனர். உத்தரபிரதேசம், மத்தியபிரதேசத்தில் புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளனர். தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்த நாங்கள் விடமாட்டோம். தொழிலாளர்களுக்கு எதிரான போக்கை அரசு கைவிட வேண்டும்.
கர்நாடகத்தில் இருக்கும் வெளிமாநிலத்தினரை சொந்த ஊருக்கு அனுப்ப அரசே போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பிரதமரின் கேர் நிதிக்கு ரூ.35 ஆயிரம் கோடி வந்துள்ளது. அந்த நிதிக்கு கர்நாடகத்தில் இருந்து ரூ.3,500 கோடி சென்றுள்ளது. அந்த பணத்தை கொண்டு தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வேண்டாமா?.
கை தட்டுங்கள்
தீபம் ஏற்றுங்கள், கை தட்டுங்கள் என்று சொன்னால் போதுமா?. இதன் மூலம் மக்கள் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா?. பரவியுள்ள கொரோனா பாதிப்பு மாயமாகிவிடுமா?. தொழிலாளர்கள், பொருளாதாரத்தின் முதுகெலும்பு. அவர்கள் இல்லாவிட்டால் உற்பத்தி துறை செயல்படாது. எங்கள் கட்சி தலைவி சோனியா காந்தி கடிதம் எழுதி, தொழிலாளர்களுக்கு உதவும்படி எங்களுக்கு உத்தரவிட்டார்.
அதனால் நாங்கள் தொழிலாளர்களுக்கு உதவி செய்து வருகிறோம். கொரோனா விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று நாங்கள் அமைதியாக உள்ளோம். தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து முதல்-மந்திரிக்கு நான் பல முறை கடிதம் எழுதியுள்ளேன். நாங்கள் கொடுத்த ஆலோசனைகளை முதல்-மந்திரி ஏற்கவில்லை.
தீவிரமான போராட்டம்
கிராம பஞ்சாயத்து தலைவர்களின் பதவி காலம் நிறைவடைகிறது. அதற்கு தேர்தலை நடத்தாமல், நிர்வாக பணிக்கு பா.ஜனதாவினரை நியமனம் செய்கிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு நாங்கள் தீவிரமான போராட்டத்தை நடத்துவோம். மத்திய வேளாண்மை சந்தை சட்டத்தை கொண்டு வந்து, அதை அமல்படுத்தும்படி மாநிலங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.
இது மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக உள்ளது. இந்த சட்டத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். பெரிய நிறுவனங்கள் தான் பயன் பெறும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.