திருவாரூர் மாவட்டத்தில், 3 நாட்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 97 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் 3 நாட்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 97 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் 3 நாட்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 97 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதிரடி வேட்டை
திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொது மக்களின் நடமாட்டம் மற்றும் சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சட்டவிரோதமாக மணல் கடத்தல், மது விற்பனை, சூதாட்டம், லாட்டரி விற்பனை ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கும் விதமாக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின்படி 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் அதிரடி வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர்.
97 பேர் கைது
இதில் மது பாட்டில்கள் மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்ட 54 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு, 2 டிராக்டர்கள் உள்பட 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 34 பேரையும், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் ஆக மொத்தம் 97 பேரை போலீசார் கைது செய்தனர். எனவே சட்ட விரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு துரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.