கொரோனா பாதிப்பு எதிரொலி: சிறைகளில் இருந்து மேலும் 12 ஆயிரம் கைதிகள் விடுதலை - மராட்டிய அரசு முடிவு

கொரோனா பாதிப்பு காரணமாக மராட்டிய சிறைச்சாலைகளில் இருந்து ஜாமீன் மற்றும் பரோலில் மேலும் 12 ஆயிரம் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-12 23:27 GMT
மும்பை, 

கொரோனா பாதிப்பில் மராட்டியம் தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த கண்ணுக்கு தெரியாத வைரஸ் சிறைச்சாலைகளுக்குள்ளும் புகுந்து விட்டது. இந்த வைரசை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிரமாக போராடி வருகிறது.

சிறைச்சாலைகளில் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தற்காலிக ஜாமீன் மற்றும் பரோலில் கைதிகளை விடுதலை செய்வதற்காக மாநில அரசு உயர் மட்ட குழுவை அமைத்தது.

மும்பை ஐகோர்ட்டு நீதிபதி ஏ.கே.சயீத், மாநில உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் சஞ்சய் சாஹண்டே, சிறைத்துறை டி.ஜி.பி. எஸ்.என்.பாண்டே ஆகியோர் அடங்கிய இந்த உயர்மட்ட குழு சுமார் 5 ஆயிரம் கைதிகளை ஜாமீன் மற்றும் பரோலில் விடுதலை செய்தது.

கைதிகள் பாதிப்பு

இந்தநிலையில், சிறைத்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எல்லாம் மீறி இந்த கொடூர வைரஸ் சிறைச்சாலைகளுக்கு உள்ளேயும் சாதாரணமாக புகுந்து விட்டது.

மும்பை ஆர்தர்ரோடு சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகளும் மற்றும் சிறைகாவலர்களும் இந்த வைரசின் கோரப்பிடியில் சிக்கி உள்ளனர். பைகுல்லா பெண்கள் சிறையில் ஒரு கைதி உள்பட 2 பேரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மராட்டிய சிறைச்சாலைகளில் கொரோனாவின் தீவிரம் காரணமாக அடைக்கப்பட்டு உள்ள 35 ஆயிரம் கைதிகளில் 50 சதவீதம் பேரை தற்காலிக ஜாமீன் மற்றும் பரோலில் விடுதலை செய்ய மாநில அரசின் உயர் மட்ட குழு முடிவு செய்து உள்ளது.

இது தொடர்பாக மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் டுவிட்டரில் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மேலும் 12 ஆயிரம் கைதிகள் விடுதலை

மும்பை ஆர்தர்ரோடு சிறையில் 185 கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்ற சிறைகளில் இந்த நோய் பரவாமல் தடுக்க மாநிலம் முழுவதும் சிறைகளில் இருக்கும் 35 ஆயிரம் கைதிகளில் 17 ஆயிரம் பேரை தற்காலிக பரோலில் விடுவிக்க முடிவு செய்துள்ளது.

இதில் ஏற்கனவே 5 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்ற 3 ஆயிரம் கைதிகளும், 7 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற 9 ஆயிரம் கைதிகளும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

இருப்பினும் பாலியல் பலாத்காரம், பெரியளவிலான நிதி மற்றும் வங்கி மோசடி, பயங்கரவாத தடுப்பு சட்டம், மராட்டிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்சட்டம் (மோக்கா) ஆகியவற்றின் கீழ் தண்டனை பெற்றவர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரோலுக்கு உரிமை இல்லாத கைதிகள்

இதற்கிடையே சிறப்பு சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட மற்றும் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க முடியாது என்ற முடிவு பாரபட்சமானது மற்றும் தன்னிச்சையானது என்று வக்கீல் எஸ்.பி.தலேகர் என்பவர் உயர்மட்ட குழுவில் முறையிட்டார்.

ஆனால் அவரது முறையீட்டை உயர் மட்ட குழு நிராகரித்தது.

குற்றத்தின் தீவிரத்தை மட்டுமல்லாமல் குற்றத்தின் தன்மையையும் பொறுத்து எந்த வகை கைதிகளை தற்காலிக ஜாமீன் மற்றும் பரோலில் விடுவிக்க முடியும் என்பதை தீர்மானிக்க உயர் மட்ட குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு முழுமையான அதிகாரம் வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த தற்காலிக ஜாமீன் அல்லது பரோலுக்கு உரிமை இல்லாத கைதிகள் சம்மந்தப்பட்ட நீதிமன்றங்களிடம் இருந்து வழக்கமான ஜாமீன் பெற அணுகலாம் என்று உயர் மட்ட குழு தெரிவித்தது.

மேலும் செய்திகள்