74 ஆயிரம் 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்

பாபநாசம் சட்டமன்ற தொகுதி முழுவதும் உள்ள 74 ஆயிரம் 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசியை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.;

Update: 2020-05-12 23:26 GMT
கபிஸ்தலம், 

பாபநாசம் சட்டமன்ற தொகுதி முழுவதும் உள்ள 74 ஆயிரம் 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசியை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.

தலா 10 கிலோ அரிசி

கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 45 நாட்களுக்கு மேல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கும், பாதிப்புக்குள்ளாகி வந்தனர். இந்தநிலையில் பொதுமக்களின் சிரமத்தில் பங்கேற்கும் வகையில் அமைச்சர் துரைக்கண்ணு தனது சொந்த நிதியில் இருந்து தொகுதி முழுவதும் உள்ள 74 ஆயிரத்து 431 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வீதம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து, அதனை பாபநாசம் பாரத ஸ்டேட் வங்கி அருகில் முதன்முதலில் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்குள் தொகுதி முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி வீதம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து நிருபர்களிடம் கூறியதாவது:-

நன்றி

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட அனைத்து பொது மக்களுக்கும் முதல்-அமைச்சர், குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி மற்றும் உணவு பொருட்கள், ரூ.1,000 வழங்கினார். இதனை தொடர்ந்து ஜூன் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி, சர்க்கரை, ஆயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் விவசாயிகள் விளைவித்த பொருட்கள் அனைத்தும் சந்தையில் விற்பனையாகி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் சந்தையில் தற்போது கிடைத்து வருகிறது. மேலும் இந்த கொடிய வைரஸ் நோயில் இருந்து பொது மக்களை காக்கும் சுகாதாரத்துறையினர், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் அசோக்குமார், கோபிநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், நகர வங்கி தலைவர் சபேசன், துணைத்தலைவர் சதீஷ், கூட்டுறவு சங்க தலைவர் முத்து, இயக்குனர்கள் சின்னையன், பாலு, அரசு வக்கீல் சரவணன், அ.தி.மு.க. நிர்வாகிகள் மணி, கலைநிதி, முருகன், அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அய்யம்பேட்டை

முன்னதாக அய்யம்பேட்டை அருகே சூலமங்கலம் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அவர் வசித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார். இதில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கோபிநாதன், பாபநாசம் தாசில்தார் கண்ணன், ஒன்றிய ஆணையர்கள் அறிவானந்தம், ஆனந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சுசிலா பத்மநாபன், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் முருகன், சதீஷ், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்