ஊரடங்கால் 5 ஆயிரம் மாட்டுவண்டி தொழிலாளர்கள் பாதிப்பு - வளர்த்த மாடுகளை விற்கும் அவலம்
வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கால் 5 ஆயிரம் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வேலையிழந்து வருமானத்துக்கு வழியின்றி தவிக்கின்றனர். அவர்களில் பலர் வளர்த்த மாடுகளை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேலூர்,
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் உள்ளனர். ஊரடங்கால் அவர்கள் தற்போது வருமானம் இன்றி நாட்களை கடத்தி வருகின்றனர். இது குறித்து வேலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே.சங்கர் கூறியதாவது:-
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பாலாற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் தான் அதிக அளவில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
ரங்காபுரம், மேல்மொணவூர், வடவிரிஞ்சிபுரம், பனஞ்சோலை, சாத்தம்பாக்கம், நவ்லாக் போன்ற பகுதிகளில் மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. அந்த குவாரிகளில் அனுமதி அட்டை பெற்று மணல் விற்பனை செய்து வந்தோம். ஒரு அனுமதி அட்டைக்கு ஒருமுறை மட்டுமே மணல் எடுக்க முடியும். அதன் மூலம் ரூ.1,500 பெறுவோம். அந்த தொகையில் ரூ.800-வரை 2 மாடுகளுக்கு தீவனம் வாங்குவதற்கே செலவாகி விடும். மீதம் உள்ள பணத்தை வைத்து தான் தொழிலாளர்கள் குடும்பத்தை நடத்தி வந்தனர்.
ஒரு மணல் குவாரியில் 11 மாதத்துக்கு மணல் அள்ள அனுமதி கிடைக்கும். ஆனால் சில காரணங்களால் 6 மாதம் தான் எங்களால் அங்கு மணல் எடுக்க முடிகிறது. கட்டுமான பணிக்கு கட்டுப்பாடுகள் தளர்வு இருந்தாலும் எங்களுக்கு மணல் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை. ஏற்கனவே செயல்பட்டு வந்த மணல் குவாரிகளில் இனி மணல் எடுக்க முடியாது.
வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம் அருகே பசுமாத்தூர், காட்பாடி அருகே அரும்பருத்தி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு அருகே பூங்கோடு ஆகிய பகுதிகளில் மணல் குவாரிகள் தயார் நிலையில் உள்ளது. மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு இந்த மணல் குவாரிகளில் மணல் எடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஊரடங்கால் வருமானம் இல்லாததால் குடும்பத்தை பார்ப்பதற்கே தொழிலாளர்களால் முடியவில்லை. எங்களுக்கு உணவளிக்கும் மாடுகளையும் கைவிட முடியவில்லை. கடன் வாங்கித் தான் மாடுகளுக்கு தீவனம் மற்றும் பராமரிப்பு செலவுகளை செய்து வருகிறோம்.
பல தொழிலாளர்கள் மாடுகளுக்கு தீவனம் வாங்கி போட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகள் போல் வளர்த்த மாடுகளை பலர், விற்று வருகின்றனர். ஒரு ஜோடி மாடு ரூ.85 ஆயிரம் முதல் ரூ.1½ லட்சம் வரை விற்பனை ஆகும்.
ஆனால் தற்போதைய சூழலில் மிகக்குறைந்த அடிமாட்டு விலைக்கு தான் மாடுகளை விலைக்கு கேட்கின்றனர். அந்த பணத்தை வைத்து தான் குடும்பத்தை நடத்தும் நிலையும் உருவாகி உள்ளது. தொழிலாளர் நல வாரியங்களில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் 1 சதவீதம் பேர் தான் பதிவு செய்துள்ளனர். எனவே அரசின் நிவாரண தொகை அனைத்து மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கும் சென்றடையவில்லை. எனவே மாட்டுவண்டி சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு கூடுதலாக நிவாரண தொகை வழங்க வேண்டும். இந்த நிலை மணல் அள்ளும் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மட்டும் அல்ல, மாட்டுவண்டிகள் மூலம் மளிகை பொருட்கள், உரம் போன்ற பொருட்களை ஏற்றிச் செல்லும் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.