தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-12 22:38 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 69 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் நேற்று வரை 46 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 23 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் வல்லத்தை சேர்ந்த 52 வயது பெண் குணமடைந்ததையடுத்து நேற்று வீடு திரும்பினார். தற்போது 22 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

தேங்காய் வியாபாரம்

பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சியை சேர்ந்த ஒருவர் சென்னை மதுரவாயலில் தங்கி இருந்து கோயம்பேடு மார்க்கெட்டில் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் சொந்த ஊருக்கு வந்தார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், தாசில்தார் அருள்பிரகாசம், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் பாலசுப்பிரமணியன், ரவிச்சந்திரன், ஒன்றிய குழு தலைவர் பழனிவேல், துவரங்குறிச்சி ஊராட்சி தலைவர் மல்லிகா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசித்து வந்த பகுதிகளை பார்வையிட்டனர். இதையடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டவர் வீட்டில் இருந்து அதிராம்பட்டினம் சாலையின் இருபக்கமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன.

மூதாட்டிக்கு தொற்று

கும்பகோணம் தோப்புத்தெருவை சேர்ந்த 64 வயது மூதாட்டி தனது மகளின் பிரசவத்திற்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் அந்த மூதாட்டி உறவினரின் திருமணத்திற்காக கடந்த 10-ந் தேதி கும்பகோணம் வந்தார். அப்போது தஞ்சை மாவட்ட எல்லையான, நீலத்தநல்லூர் கொள்ளிடம் பாலத்தில் உள்ள சோதனை சாவடியில் மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என சுகாதார துறையினர் பரிசோதனை செய்தனர்.

நேற்று வந்த பரிசோதனை முடிவில் அந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த மூதாட்டியை சுகாதாரத்துறையினர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சுகாதாரத்துறையினர் தோப்புத்தெரு முழுவதும் ‘சீல்’ வைத்து அடைத்தனர். அந்த மூதாட்டியுடன் வசித்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்